நாட்டுக் கோழி பிரியாணி

தேவையான பொருட்கள்

பிரியாணி வகைகளில் நாட்டுக் கோழி பிரியாணியின் ருசியே தனிதான்.
இதெல்லாம் தேவை
பாசுமதி அரிசி - 1 கிலோ
சுத்தம் செய்த நாட்டுக் கோழி - 2 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 25
தக்காளி - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
கொத்து மல்லி - அரை கட்டு
புதினா - அரை கட்டு
நெய் - 250 கிராம்
பட்டை ,இலவங்கம், பிரிஞ்சி இலை,ஏலக்காய் - 15 கிராம்
தயிர் - 200 கிராம்

செய்முறை

  1. முதலில் கோழியை நன்கு கழுவிக் கொள்ளவும்.
  2. பின்னர், இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
  3. பச்சை மிளகாயையும் தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. நெய்யை இரு பாகமாக பிரித்துக் கொண்டு, ஒரு பாகம் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி காய விட வேண்டும்.
  5. அதில், அரைத்த பச்சை மிளகாயைப் போட்டு 5 நிமிடம் வதக்கி பின்னர் கோழியைப் போட்டு 5 நிமிடம் வதக்கியதும் அதனுடன் மஞ்சள் தூளை சேர்த்து கிளறவும்.
  6. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  7. அதன்பின் மறுபடியும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதி நெய்யை ஊற்றி, காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய் தட்டி போட்டு, பிரிஞ்சி இலையையும் அதனுடன் சேர்க்கவும்.
  8. பின்னர் அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, புதினா, மல்லி தழை ஆகியவற்றை போட்டு மீண்டும் வதக்கவும்.
  9. பின்னர், ஊறவைத்த கறியை நன்றாக கிளறி குக்கரில் வைத்து மூடவும்.
  10. ஆவி வந்ததும் வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும், தீயை மெதுவாக எரியவிடவும்.
  11. பத்து நிமிடம் கழித்து தீயை அணைத்த பிறகு சாதத்தை தனியாக குக்கரில் வடித்து, ஏற்கனவே தயாராக உள்ள கறியுடன் கலந்தால் நாட்டுக் கோழி பிரியாணி தயார்.

வயிற்றை பாதுகாக்க தீபாவளி லேகியம் சாப்பிடுங்க…


தீபாவளிக்கு எண்ணெய் பலகராமும், நெய்யில் செய்த பட்சணங்களையும் ஒரு கட்டு கட்டியிருப்போம். திடீரென்று அதிக அளவில் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு கடா முடா என்று ஒரு வழி செய்து விடும். அஜீரணக் கோளாறு வேறு அவஸ்தையை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து தப்பிக்க கைவசம்தீபாவளி ஸ்பெசல்' லேகியம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்

 தீபாவளி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள்  

பெருங்காயம் - 25 கிராம்  
பேரிச்சை - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்  
சீரகம் - 3 டீ ஸ்பூன்  
வால்மிளகு - 2  
திப்பிலி - 2  
நெய் - 25  
உப்பு - கால் டீ ஸ்பூன்  

செய்முறை  

பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும். அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும். நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். கலவை திரண்டு திக்காகி அல்வா பதம் உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிறுப் பொருமல் இருக்காது. சளி பிடிக்காது. இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம். தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.

மலபார் மட்டன் பிரியாணி

மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
  • மட்டன் - ½ கி.கி (நடுத்தரமாக நறுக்கியது)
  • கொத்தமல்லி இலை – 25 கிராம்
  • புதினா இலை – 25 கிராம்
  • கறிவேப்பிலை – 10 கி
  • பச்சை மிளகாய் – 5
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பூண்டு(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • இஞ்சி – 2 தேக்கரண்டி (நறுக்கியது)
  • மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
  • கசகசா விழுது – 1 தேக்கரண்டி
  • தயிர் - ½ கப்
  • கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகத்தூள் - ½ தேக்கரண்டி

பிரியாணி சாதம் செய்ய தேவையான பொருட்கள்
  • நெய் – 3 கப்
  • இலவங்கப்பட்டை – 5-6 (கம்பு)
  • பிரியாணி இலை – 1
  • ஏலம் – 4-5
  • கறிவேப்பிலை
  • வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
  • பிரியாணி அரிசி – 250 கி
  • தண்ணீர் -½ லி

மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
  • நெய் – 2 கப்
  • இலவங்கப்பட்டை – 5
  • பிரியாணி இலை – 1
  • கிராம்பு – 4
  • ஏலம் – 4
  • ஜாதிக்காய் – 100 கிராம்
  • தக்காளி – 1

அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் 
  • வெங்காயம் (மெலிதாக) – 1 கப்
  • முந்திரிப் பருப்பு - ¼ கப்
  • உலர்ந்த திராட்சை - ¼ கப்

செய்முறை
நீங்கள் இப்போது மட்டனை செய்ய தயாராகலாம். மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதோடு இஞ்சி, கிராம்பு, ஏலம், பெருஞ்சீரகம், கசகசா விழுது, நறுக்கிய இஞ்சி, ஜாதிக்காய், பிரியாணி இலை, புதினா இலை, சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, தயிர் மற்றும் உப்பு நன்கு கலந்து தனியாக வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே மாதிரி நெய்யில் உலர்ந்த திராட்சையையும் வறுத்து எடுக்கவும். அதன் பின்னர் வெங்காயம், உப்பு போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை போட்டு கிளறவும். அத்தோடு தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். இப்போது ஊற வைத்த மட்டனை அத்தோடு சேர்க்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தை எடுத்து நான்கு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதனுள் கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலம், சீரகத்தூள் மற்றும் கறிவேப்பிலை போடவும். பின்னர் இலவங்கப்பட்டை மற்றும் வெங்காயம் போட்டு நன்கு கிளறவும். அதோடு சாதத்தை சேர்த்து திரும்பவும் நன்கு கிளறவும்.  தேவையான அதாவது அரிசி அளவு நீர் மூழ்கும் அளவு நீர் ஊற்றவும். பின்னர் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து வேக விடவும்.

மட்டன் வெந்ததும் பாத்திரத்தின் மூடியை திறந்து மறுபடியுமாக சிறிது கிளற வேண்டும்.

சாதம் செய்த பாத்திரத்திலிருந்து ஒரு பகுதி சாதத்தை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சில துண்டு மட்டனை எடுத்து மீதம் இருக்கும் சாதத்தின் மீது வைக்கவும் இப்போது தனியாக எடுத்து வைத்த சாதத்தை மட்டன் மீது பரப்பவும். திரும்பவும் மட்டன் துண்டுகள் பரப்பி அதன் மீது சாதத்தை பரப்பவும். இப்படியாக மொத்த சாதமும் மட்டனும் சமமாக அடுக்குகளாக பரப்பப்பட்ட பின்னர் இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை வெங்காயத்தை சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி சிறிது அடுப்பில் வைத்து வேக விடவும்.

இப்போது ருசியான கமகமக்கும் கேரள மலபார் பகுதி பிரசித்திப்பெற்ற  பிரியாணி ரெடி.

ஆம்பூர் சிக்கன் பிரியாணி

தே.பொருட்கள்:


சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 1 பெரியது
அரிந்த தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்,சிகப்பு புட்கலர் - தலா 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கிராம்பு - 5
ஏலக்காய் - 6

செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்த பின் அரிசியை போட்டு 10 நிமிடத்தில் வடித்துவிடவும்.தம் போட சரியாக இருக்கும்.

வெங்காயம் வதங்கியதும் பூண்டு விழுது+புதினா கொத்தமல்லி+இஞ்சி விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+தயிர் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைப் போட்டு 15 நிமிடம் வதக்கவும்.1 கப் நீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

கிரேவி நன்கு கொதித்து சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து பின் வடித்த அரிசியை கொட்டி சமன்படுத்தி 2 புட்கலர்களையும் மேலே ஊற்றி தம் போடவும். பாத்திரத்தை சுற்றிலும் அலுமினியம் பேப்பரால் நன்கு இறுக மூடி போடவும்.

15 நிமிடம் கழித்து சாதத்தை உடையாமல் நன்கு கிளறி விட்டால் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயாராகிவிடும். ஆம்பூர் பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. காரணம் அதில் நெய், டால்டா சேர்ப்பதில்லை
 

பருப்புக் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்புஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம்அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், மஞ்சள்தூள்ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய்தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்து கரைந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக் கூட்டு.